உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
ரமேஷ் சென்னிதலா வருகை: கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா சத்தியமூர்த்திபவனுக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசரைச் சந்தித்து ரமேஷ் சென்னிதலா வாழ்த்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சென்னிதலா கூறியது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழகத்தில் காங்கிரஸ் நன்கு வளர்ச்சி பெறும். ராகுல்காந்தியைச் சந்தித்தபோதும் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் சிறந்த தேர்வு என்று கூறினேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு நான் சென்றிருந்தபோது, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது என்றார். முல்லைப் பெரியாறு விவகாரம்: அதன்பின், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சென்னிதாலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியது: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுகவை எதிர்த்து சில இடங்களில் காங்கிரஸார் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் தேதியைக் கடந்திருந்தால், யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது தெரிந்திருக்கும். அதற்குள் உள்ளாட்சித் தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்படும்போது இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காங்கிரஸுக்கு அவர் கருத்துக் கூறாமல், முதலில் பாஜகவைத் தேர்தலில் போட்டியிடுமாறு கூறட்டும் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment