மன்னிப்பு கேட்ட நடிகர்!

கொஞ்சம் அசந்தால், ஆளையே அட்ரஸ் இல்லாமல் செய்து விடுவர் போலிருக்கிறது' என, புலம்புகிறார், கன்னட திரையுலகின் மூத்த நடிகரும், மாண்டியா தொகுதியைச் சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ.,வுமான, அம்பரீஷ். தமிழகம் - கர்நாடகா இடையே, சமீபத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான பிரச்னை ஏற்பட்ட போது, கர்நாடகாவில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், வேறுபாட்டை மறந்து, ஓரணியில் திரண்டன.
ஆனால், போராட்டம் தீவிரமாக நடந்த மாண்டியா தொகுதியின், எம்.எல்.ஏ., வான அம்பரீஷை, ஆளையே காணவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்கு வெளிநாடு சென்றுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். மாண்டியா தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இதை நம்பவில்லை. 'எங்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,வை காணவில்லை; அவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு பரிசு தரப்படும்' என, தொகுதி முழுவதும் போஸ்டர், பேனர்களை வைத்தனர். இதுகுறித்த தகவல், அம்பரீஷுக்கு தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக, மாண்டியாவுக்கு பறந்து வந்தார். 'உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்கு சென்றிருந்ததால், காவிரி போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை; வேறு எந்த காரணமும் இல்லை; என்னை மன்னித்து விடுங்கள்' என, தழுதழுத்த குரலில், உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதனால், அவருக்கு ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அவரது அரசியல் எதிரிகளோ, 'ஆஹா... நல்ல வாய்ப்பு கை நழுவி போய் விட்டதே' என, புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment