ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

''மாஜி அமைச்சருக்கு, மாவட்ட செயலரே, 'ஆப்பு' வைச்ச கதை தெரியுமா வே...'' என, டீக்கடையில் அமர்ந்திருந்த நண்பர்களை நோக்கி வந்தபடியே கேட்டார் அண்ணாச்சி.
''எந்துார்ல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''திருவண்ணாமலையில, மாஜி அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் உடல்நலம் பெற வேண்டி, கிரிவலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாரு... அவரோட ஆதரவாளர்கள், 5,008 பேரைத் திரட்டி, எல்லாரும் கிளம்பி வரப் போற நேரத்துல, மாவட்ட செயலரின் ஆதரவாளர்கள் சிலர், 'ப்ரோக்ராம் கேன்சலாகிடிச்சு...'ன்னு, நிறைய பேருக்கு போனைப் போட்டுச் சொல்லிப்புட்டாவ...
''அவங்களும், 
அது உண்மைன்னு நினைச்சு, கிரிவலத்துக்குப் போறதைத் தவிர்த்திட்டாவ... ''அன்னைக்கு சாயங்காலம், 'எதுக்கும் ஒன்றிய செயலரைக் கேப்பம்'ன்னு போன் செஞ்சா, 'யாரும் கேன்சல் செய்யலியே...'ன்னு அவர் முழிக்க, மா.செ.,யின் வில்லங்கம் வெளியே தெரிஞ்சுது... அதுக்கப்புறமா, ராத்திரி, 9:00 மணிக்கு கிரிவலம் துவக்கினாவ...'' எனக் கூறினார் அண்ணாச்சி.
கடைக்கு வந்த 
நபரை, ''வாங்க ராஜன்...'' என அழைத்த அந்தோணிசாமி, அவருக்கு டீ, 'ஆர்டர்' செய்து கொடுத்தார்; அவரும், அமைதியாய் குடித்து முடித்துக் கிளம்பினார்.
''பணத்தை வாங்க முடியாம தவிக்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். 
''யாருனு, விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. 
''தமிழ்நாடு மின் வாரியம், முக்கிய நகரங்களில் உள்ள துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்சில், நவீன மீட்டரை பொருத்தி, மென்பொருள் வாயிலா இணைக்க முடிவு 
செஞ்சது பா... ''இதன் மூலமா, 
உயரதிகாரிகள், டிரான்ஸ்பார்மரில் செல்லும் மின்சார அளவு, மின் திருட்டு, நுகர்வோரிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, தங்கள் கம்ப்யூட்டர் மூலமாகவே கண்டறிய முடியும் பா...
''இந்த பணிகளுக்காக, மத்திய அரசு, 300 கோடி ரூபாய் ஒதுக்கி, 100 கோடி ரூபாய் கொடுத்திருக்கு... ஆனால், மென்பொருள் ஒருங்கிணைப்பை செய்ய வேண்டிய தனியார் நிறுவனம், நான்கு வருஷமாகியும் வேலையை 
முடிக்கலே... ''இதனால, 200 கோடி ரூபாயும் பெண்டிங்ல இருக்கு... என்ன செய்யறதுன்னு தெரியாம, அதிகாரிகள் தவிக்கிறாங்க பா...'' என, விளக்கினார் அன்வர்பாய். 

''மகிழ்ச்சி...'' என, மொட்டையாய் மூன்றாவது மேட்டரைத் துவக்கினார் குப்பண்ணா.
''என்னங்க... ரஜினி டயலாக் பேசுறீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''ஓ.பி.எஸ்.,சுக்கு அடிச்சிருக்கற, 'லக்'கைப் பார்த்து, அவரது ஆதர வாளர்கள் மகிழ்ச்சியாகிட்டா... சட்டசபை தேர்தலுக்கு முன், தலைமையிடம், 'மாத்து' வாங்கின, ஓ.பி.எஸ்., இப்போ, மிக முக்கியமான நபரா மாறிட்டாரே... அந்த சந்தோஷம் தான்...'' என்றபடி, குப்பண்ணா நடையைக் கட்ட, மற்றவர்களும் கிளம்பினர்.
நாயரின் கடை ரேடியோவில், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்காக, வாலி எழுதிய, 'கண்டதைச் சொல்லுகிறேன்' பாடலில், 'கும்பிட சொல்லுகிறேன்... உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்... கும்பிட சொல்லுகிறேன்... உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்' என்ற வரிகள், திரும்பத் திரும்ப ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நாயர் சிரித்தபடியே, ரேடியோவை அணைத்தார்.

No comments:

Post a Comment